பைக்குகள் நேருக்குநேர் மோதலில் எஸ்.ஐ. மகன் பரிதாப பலி: இன்ஜினியர் படுகாயம்

அண்ணாநகர்: சென்னை கீழ்ப்பாக்கம் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (27), பி.இ படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். இவரது சித்தி மகள் ஷாலினி (21). இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை தினமும் கல்லூரியில் விடுவதற்கு விக்னேஷ் பைக்கில் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தங்கை ஷாலினியை கல்லூரியில் விடுவதற்கு அண்ணா நகர் சிந்தாமணி அருகே விக்னேஷ் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே அதிவேகமாக பைக் ஓட்டி வந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் பவுன்குமார் (21) என்பவர் விக்னேஷ் வந்த பைக்கில் நேருக்கு நேராக பயங்கரமாக மோதினார். இதில், விக்னேஷ் தலை, கை, கால், கண் ஆகிய இடங்களில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். அவருடன் வந்த கல்லூரி மாணவி ஷாலினியின் இடதுகால் முறிவு ஏற்பட்டு அவரும் மயங்கி கீழே விழுந்தார். அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பவன் குமாருக்கும் தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவரும் சுயநினைவு இல்லாமல் மயங்கி கீழே கிடந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி ஷாலினி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் இன்ஜினியர் பவுன் குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  விபத்தில் உதவி ஆய்வாளர் மகன், பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: