பெயின்டருக்கு வெட்டு, ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி வியாசர்பாடியில் 2 ரவுடிகள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் மாமூல் கேட்டு பெயின்டரை வெட்டிய வழக்கிலும், ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்துச் சென்ற இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி எஸ்ஏ காலனி 3வது தெருவை சேர்ந்தவர் குணசேகர் (22), சொந்தமாக பெயின்டிங் வேலை செய்கிறார். இவரது தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் (42) என்பவர் அடிக்கடி குணசேகரை மிரட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோன்று, கடந்த ஜூன் 23ம்தேதி பணம் கேட்டு குணசேகரை மிரட்டி உள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குணசேகரை கத்தியால் காலில் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில், பலத்த காயமடைந்த குணசேகர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வெங்கடேசன் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று முன்தினம் எம்கேபி நகர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வெங்கடேசனை வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே மடக்கி பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியை சேர்ந்தவர் எல்லையப்பன் (45). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 16ம்தேதி இரவு 10 மணியளவில் வியாசர்பாடி உதயசூரியன் நகர் மாநகராட்சி பூங்கா அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 3 பேர், ஆட்டோவை மடக்கி சவாரி செல்வதுபோல், அவரிடம் பேச்சு கொடுத்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால், எல்லையப்பன் என்னிடம் பணம் இல்லை என கூறவே, ஆட்டோ கண்ணாடியை உடைத்து, கத்தியால் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.1,000ஐ பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த எல்லயப்பன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, பின்னர், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 4வது தெருவை சேர்ந்த வாசுதேவன் (20) என்ற நபரை, எம்கேபி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், குடிபோதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்பவத்தன்று எல்லையப்பனை தாக்கி பணம் பறித்தது தெரியவந்தது. இதனால், வாசுதேவன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: