அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை தூண்டும் வகையில் 13,210 பள்ளிகளில் வானவில் மன்றம்; புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை திருச்சியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணித ஆய்வகங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இத்திட்டம் 13,210 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்கீட்டின் கீழ் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்விக்காக வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனடிப்படையில், சில தினங்களுக்கு முன் அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா எனும் திட்டத்தை துவங்கினர். இதில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியம், பண்பாடு, கலைத்திறன்களை அறியும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளியளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் நிலையில், அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பரிசுகள் வழங்க இருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில், 2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வானவில் மன்றம்’ என்ற பெயரில் புதிய திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 3,095 உயர்நிலைபள்ளிகள், 3,123 மேல்நிலை பள்ளிகள், 6,992 நடுநிலை பள்ளிகளில் என மொத்தம் 13,210 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. திட்டத்துக்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட துவக்க விழா நேற்று காலை திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, திருச்சி விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் முதல்வருக்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர் காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு 9.40 மணிக்கு வந்தார். அங்கு என்எஸ்எஸ் மாணவர்களின் பேண்ட் வாத்திய குழு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர், நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

காட்டூர் பள்ளியில் கல்வி துறையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. முக்கியமாக, வானவில் மன்றம் குறித்த காணொலி காட்சி ஒலிபரப்பப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன், கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், எம்பிக்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் மற்றும் எம்எல்ஏக்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: