×

ஜெயின் பட்டதாரி இளம்பெண் துறவறம்: சாரட் வண்டியில் அழைத்து சென்று கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுவையில் துறவறம் செல்லும் ஜெயின் சமூக இளம்பெண்ைண அவரது உறவினர்கள் சாரட் வண்டியில் வைத்து ஊர்வலம் நடத்தினர். புதுச்சேரி வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சாந்திலால் ஜெயின். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் சலோனி ஜெயின் (22). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் துறவியாக மாற முடிவு செய்து, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சலோனி முடிவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். வரும் 4ம் தேதி பெங்களூருவில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர் மகாராஜ் முன்னிலையில், சலோனி துறவறத்திற்கான தீட்சை பெற உள்ளார்.

இதற்காக அவர் நாளை மறுநாள் பெங்களூரு செல்ல உள்ளார். இந்நிலையில் சலோனி துறவறம் செல்வதை கொண்டாடும வகையில், மேள தாளங்கள் முழங்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில், ஜெயின் சமூகத்தினர் அவரை ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பஸ்வநாத் ஜெயின் கோயில், சித்தன்குடியில் உள்ள சித்தன்நாத் ஜெயின் திகாம்பர் ஜெயின் ஆகிய கோயில்களுக்கு சலோனி அழைத்து செல்லப்பட்டு சாமியை வழிபட்டார். இதுகுறித்து சலோனி கூறுகையில், டான்ஸ் கோரியோகிராபர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. சமீபத்தில், நான் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர்ஜீ மகாராஜ் தலைமையில் 50 நாட்கள் நடந்த சாது ஜீவன் முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது, சாமியார் எப்படி வாழ்வார்களோ அந்த வாழ்வை மேற்கொண்டேன். அதிலிருந்து, ஆத்ம நிலையை அடைய முடிவு செய்து, எந்தவித ஆசைகளுக்கும் இடமின்றி, துறவறம் மேற்கொண்டு, இறைவனின் ஆசியை பெறும், ஆத்மாவை உணரும் வாழ்க்கையை வாழ தீர்மானித்தேன். என் முடிவுக்கு குடும்பத்தினர் பெருமைப்படுகின்றனர், என்றார்.



Tags : Jain Graduate Girl Consecration: Chard Carriage Celebration
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...