பழநி அருகே பரபரப்பு; சாயப்பட்டறையில் பயங்கர தீ: ரூ5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

பழநி: பழநி அருகே இன்று காலை சாயப்பட்டறையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாமிநாதபுரம் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் மற்றும் காகித ஆலைகள், எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சாயப்பட்டறையில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று பணியில் ஈடுபட்டனர்.காலை 7.30 மணியளவில் இந்த சாயப்பட்டறையில் இருந்த ஆயில் கேன்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. பணியில் இருந்த ஊழியர்கள் அணைக்க முயன்றனர்.

அணைக்க முடியாததால் தீ மளமளவென அருகிலிருந்த பாய்லருக்கு பரவியது. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறினர். தீ பற்றி எரிந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழநி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சாயப்பட்டறையில் இருந்த பாய்லர், இயந்திரங்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

Related Stories: