அன்புநகரில் 4 வருடமாக பயனற்ற தொங்கல் பாலம்; ரயில்வே அளித்த 6 மாத வாக்குறுதி காலம் முடிந்தது: சேம்பர் ஆப் காமர்ஸ் கடிதம்

நெல்லை: பாளை அன்பு நகர் ரயில்வே பாலம் 4 ஆண்டுகளாக முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் அந்தரத்தில் உள்ளது. சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் அளித்த வாக்குறுதி காலம் முடிந்தும் பணி பூர்த்தி செய்யப்படவில்லை. பாளை அன்புநகர் பகுதியில் 7 சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் ரயில்வே கிராசிங் இருபுறமும் 80 சதவீத பணிகளை முடித்துவிட்டனர். இப்பணிகள் முடிந்த 4 ஆண்டு கடந்துவிட்டது.

மையப்பகுதியில் ரயில்வே துறையினர் பாலம் அமைத்த பின்னரே பாலத்தை முழுமையாக இணைத்து பூர்த்தி செய்யமுடியும். ஆனால் இப்பணி முடியாததால் பாலம் 80 சதவீதம் கட்டி முடித்து 4 ஆண்டுகள் ஆகியும் பயனில்லாமல் உள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குணசிங் செல்லத்துரை, செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் ரயில்வே துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- அன்புநகர் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை தங்கள் பகுதி பணிகளை 80 சதவீதம் முடித்துவிட்டனர்.ஆனால் ரயில்வே தண்டவாளத்தின் மேல்புறமாக உள்ள பாலத்தின் மையப்பகுதியில் உள்ள பணிகள் ரயில்வே துறையினரால் இன்னும் முடிக்கப்படவில்லை.

மேம்பால வேலை முற்றிலும் முடிவுறாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  ரயில்வே கேட் இருபுறமும் பல பள்ளிகள், கல்லூரிகள் இயங்குவதால் கேட் மூடப்படும்போது மாணவர்கள் சரியான நேரத்தில் தங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடிவதில்லை.   நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களினால் ரயில்வே கேட் பகுதியில் மிகுந்த வாகன நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த மார்ச் 9ம் தேதி நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டத்தில் பங்கேற்ற ரயில்வே அதிகாரிகள் நிறைவு பெறாத பாலப்பணிகள் 6 மாதத்தில் முடித்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் 6 மாதம் கடந்த பின்னரும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. பாலத்தின் பணிகள் விரைவில் முடிக்க ஆவண செய்யவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: