அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் கேரளாவில் காவல் நிலையம் சூறை: உதவி கமிஷனர் உள்பட 30 போலீசார் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானி வர்த்தகத் துறைமுகத்திற்கு எதிரான மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட லத்தீன் கத்தோலிக்க சபையின் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் துறைமுகம் முன் நடந்த போராட்டத்தில் துறைமுக எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் நேரடி மோதலில் ஈடுபட்டனர். கல்வீச்சு மற்றும் தடியடியில் போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ₹2 லட்சத்திற்கும் அதிகமான பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக லத்தீன் கத்தோலிக்க சபை பிஷப் தாமஸ் ஜெ. நெட்டோ உள்பட 50க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த செல்டன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரை விடுவிக்கக் கோரி நேற்று மாலை ஏராளமானோர் விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுடன் வந்திருந்த முத்தப்பன், லியோ, சங்கி மற்றும் புஷ்பராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த வன்முறையில் இவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர். திடீரென அனைவரும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.

கம்ப்யூட்டர், வாக்கி டாக்கிகள் உள்பட பொருட்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீஸ் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஜீப்புகள் மற்றும் 2 வேன்களை அடித்து நொறுக்கினர். போலீசாரையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இரும்புக் கம்பி மற்றும் படகு துடுப்புகளால் போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சட்டிகளையும் தூக்கி போலீசார் மீது வீசினர். இதில் சங்குமுகம் உதவி கமிஷனர் ஷாஜி, விழிஞ்ஞம் இன்ஸ்பெக்டர் பிரஜீஷ் சசி, ஏட்டு சரத்குமார் சப் இன்ஸ்பெக்டர் லிஜு பி. மணி உள்பட 30 போலீசார் காயமடைந்தனர். நிலைமை எல்லை மீறியதை தொடர்ந்து திருவனந்தபுரம் நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட போலீசார் விழிஞ்ஞத்திற்கு விரைந்தனர்.

கூடுதல் போலீசார் சென்ற பின்பு தான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ், ஏடிஜிபி அஜித்குமார் மற்றும் போலீஸ் கமிஷனர் ஸ்பர்ஜன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் யூஜின் பெரராவுடன் கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் மற்றும் கமிஷனர் ஸ்பர்ஜன் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இன்றும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: