தி.மலை தீபத்திருவிழாவின் 2ம் நாளான இன்று சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை உற்சவத்தில் வெள்ளி விமானங்களில் அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர். இரவு உற்சவம் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து வாணவேடிக்கையுடன் தொடங்கியது.

அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசித்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டனர். பின்னர், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அண்ணாமலையார் பிரியாவிடையும், அன்ன வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனி வந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, தீபத்திருவிழா உற்சவசத்தில் பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்ததை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழாவின் 2ம் நாளான இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் மேளதாளம், நாதஸ்வரம், சிவ வாத்தியங்கள் இசைக்க மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றிரவு உற்சவத்தில் வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி வருகின்றனர்.

Related Stories: