×

சென்னை ஏர்போர்ட்டில் நெரிசலை குறைக்க சர்வதேச, உள்நாட்டு முனையங்களுக்கு சென்று வருவதற்கு தனித்தனி வழிகள்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில், வாகன போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக, சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தனித்தனியான வழிகளும், வாகனங்களின் கட்டண வசூலுக்கு கூடுதல் கவுன்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  உலகையே ஆட்டிப்படைத்த உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விமான நிலையம் மூடல், விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு, பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை, கட்டாயம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது, கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே  கொரோனா காலத்துக்கு முன்பு 2018ல் நாளொன்றுக்கு சுமார் 8,000 வாகனங்கள் வந்து சென்றன. தற்போது சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னை சர்வதேச முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஒரே பகுதி வழியாக வந்து விட்டு வெளியேறுவதால் வாகனங்களின் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சில வாகனங்கள், கட்டணங்கள் செலுத்தாமலேயே வெளியேறி விடுகிறது.

அதனால் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு விமானம் முனையத்திற்கு வரும் வாகனங்கள் ஒரு வழியாக வந்து விட்டு மற்றொரு வழியாக திரும்புவதற்கும், சர்வதேச விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்து விட்டு வெளியே செல்வதற்காகவும் புதிதாக வழிகள் அமைக்கப்படுகின்றன. சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே இந்த புதிய வாகன வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்காக கவுன்டர்களும் கூடுதலாக தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைப்போல் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனியாகவும், சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனியாகவும் என தனித்தனி வழிகள்  ஏற்படுத்தப்படுவதால் நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சர்வதேச முனையத்தில் இரவு நேரங்களிலும், அதிகாலைகளிலும் ஏற்படும் நெரிசல் இனிமேல் இருக்காது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வழிகளில், கட்டணம் வசூல் செய்யும் கவுன்டர்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஏற்கனவே ரூ.250 கோடி செலவில், 2000  வாகனங்கள் நிறுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ள ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த புதிய கட்டண வசூல் கவுன்டர்களும் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags : Chennai Airboard , Separate routes to and from international and domestic terminals to reduce congestion at Chennai Airport
× RELATED 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை...