ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் பதவி விலக வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு..!!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அந்த மசோதா காலாவதியாகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 32 பேர் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியது. ஆளுநர் ஒப்புதலுடன் இயற்றப்பட்ட அவசர சட்டத்தை நிரந்தரமாகும் சட்ட மசோதா, கடந்த அக்டோபர் 19ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 28ம் தேதி அனுப்பப்பட்டது.

மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அடுத்த நாளே அரசு விளக்கம் அளித்தும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்கள் முடிந்ததால், அரசியல் அமைப்பு சட்டம் 213வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் இனி பறிபோகும் உயிர்களுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் தனது பணியை சரிவர செய்யாததால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர் போயுள்ளதாக கூறியுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அதற்கு பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: