காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மருத்துவ மாணவர் நீரில் மூழ்கி பலி-கரூர் அருகே சோகம்

கிருஷ்ணராயபுரம் : கரூர் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜமீன்கான் (21). இவர், அவரது சக நண்பர்கள் 2 பேருடன் நேற்று காலை கரூர் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு சென்று உள்ளனர். அப்போது மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் இருந்து கிளை வாய்க்காலுக்கு பிரியும் இடத்தில் முகமது ஜமீன்கான் மற்றும் அவரது நண்பர்கள் குளிக்க தண்ணீரில் இறங்கியுள்ளார். இதில் முகமது ஜமீன்கான் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடன் வந்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.

இதை பார்த்த பொது மக்கள் கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிளை வாய்க்கால் ஆழமான பகுதியில் சடலமாக ஜமீன்கான் மீட்கப்பட்டார்.இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: