குமரியில் 10 மையங்களில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் 2,981 பேர் ஆப்சென்ட்-ஐ.ஜி. நேரடி ஆய்வு

நாகர்கோவில் : குமரியில் நேற்று நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் 2,981 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்), இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று (27ம்தேதி) நடந்தது. குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டிஎம்ஐ கல்லூரி, அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, பார்வதிபுரம் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி ஆகிய 10 மையங்களில்  தேர்வு எழுத 11,867 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் நேற்று 8886 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2981 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு முடிந்ததும், விடைத்தாள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. முருகன் நேற்று முன் தினம் குமரி மாவட்டம் வந்தார். நேற்று அவர், தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார்.

Related Stories: