காரியாபட்டியில் பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்-பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காரியாபட்டி : காரியாபட்டியில் பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகராக உள்ளது. இந்நகரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 7,478 குடியிருப்புகளும், 18,984 பொதுமக்களும் இருந்தனர். முதல்நிலை பேரூராட்சியான காரியாபட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தற்போது குடியிருப்புகளின் எண்ணிக்கையும், பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பேரூராட்சி 9.20 ச.கி.மீ பரப்பளவில் உள்ளது.

15 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 18 ஆயிரம் குடியிருப்புகளும், 30 ஆயிரம் மக்கள் தொகையும் உள்ளதாக விரிவடைந்துள்ளது. இப்பகுதியில் பெரும்பான்மையான மக்களின் தொழிலாக விவசாயம் உள்ளது. இந்நகரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தினசரி காரியாபட்டிக்கு வந்து செல்கின்றனர். கிராமப்புற மாணவ, மாணவியர் படிப்பதற்காக நகருக்கு வந்து செல்கின்றனர். திருச்சுழி தொகுதியில் முக்கிய பேரூராட்சியாக காரியாபட்டி உள்ளது.

கடந்த 25 ஆண்டு காலமாக பேரூராட்சி அதிமுக வசம் இருந்தது. அப்போது பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யாமல், பஸ்நிலையத்தை சுற்றி வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. மேலும், கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் வசதி இல்லை. இந்நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தலில் 25 ஆண்டுகளுக்கு பின்பு பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், கூடுதல் பஸ் வசதி வேண்டி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின்படி சுற்றி உள்ள கிராமங்களுக்கு அதிகப்படியான பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, புதிய வழித்தடங்களையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

ஆனால், பஸ்நிலையம் அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தற்போது காரியாபட்டியிலிருந்து கிராமங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்து இடநெரிசல் ஏற்பட்டுள்ளது. 6 பஸ்கள் மட்டுமே நிற்கும் அளவிற்கு இடவசதி உள்ளது. இதில், நடைபாதை வியாபாரிகள், டூவீலர்களை நிறுத்தி இடநெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். பஸ்நிலையத்தில் உள்ளே நிற்கக் கூடிய 6 பஸ்களில், ஒரு பஸ்சை வெளியில் எடுத்துச் சென்றால் மட்டுமே அடுத்த பஸ்சை உள்ளே நிறுத்த முடிகிறது.

இதனால், அருப்புக்கோட்டை-மதுரை மெயின்ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மற்ற வாகனங்கள் விலகி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, காரியாபட்டியில் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில் கூறுகையில், ‘காரியாபட்டி பேரூராட்சி கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்தது. அப்போது எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யாத நிலையில், திருச்சுழி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதிகள் ஏற்பாடு செய்து புதிய வழித்தடங்களையும் துவக்கி வைத்தார். இதனால், பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், பஸ்நிலையத்தில் இடநெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: