வனப்பகுதியில் கொசு தொந்தரவு விளைநிலங்களுக்குள் புகுந்தது யானைக்கூட்டம்

பழநி : வனப்பகுதிகளில் கொசுக்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதால் யானைக்கூட்டம் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. ஒட்டன்சத்திரம் வனப்பகுதி பெரிய வனப்பரப்பைக் கொண்டது. இங்கு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த யானைக்கூட்டம் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஓட்டிய விளைநிலங்களுக்கும், அணைப்பகுதிகளுக்கும் வந்து கொண்டிருக்கும். விளைநிலங்களுக்குள் யானைகள் வருவதைத் தடுக்க வனத்துறை சார்பில் அகழி மற்றும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளன. எனினும், யானைகள் வருவதை தடுக்க முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த திடீர் மழையின் காரணமாக வறட்சியில் காய்ந்து கிடந்த வனப்பகுதி வளமடைந்தது. புற்கள் மற்றும் தண்ணீர் கிடைத்ததால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவது குறைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் யானைக்கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியே வரத்துவங்கி உள்ளன. கடந்த சில தினங்களாக ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட கோம்பைபட்டி பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. திடீர் மழையின் காரணமாக வனப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்துள்ளன. கொசுக்களின் தொந்தரவு தாங்காமல் யானைகள் வெளியே வந்துவிடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

யானைகள் மீண்டும் வெளியே வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து கோம்பைபட்டியைச் சேர்ந்த விவசாயி துரை கூறியதாவது, ‘‘எனது தோட்டத்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் அங்கு பயிரிப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் மற்றும் தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி விட்டன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையினர் வனப்பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும். வனப்பகுதி எல்லைகளில் பழுதடைந்துள்ள சோலார் மின்வேலிகளை சரிசெய்ய வேண்டும்.’’ என்றார்.

Related Stories: