தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்றும் காலையில் அதிக பனி மூட்டம்: எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் : தமிழ்நாட்டில்  பல மாவட்டங்களில் இன்றும் காலையில் அதிக பனி மூட்டம் காணப்பட்டதால் குளுமையான சூழல் நிலவியது. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். திருவள்ளூர் ரயில்வே பாதையில் வழக்கத்தை விட அதிக பனிமூட்டம் காணப்பட்டது. தொடர் மழை பெய்த நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால் திருவள்ளூரில் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக பனிப்பொழி காணப்பட்டது. இதனால், காலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். குளிர் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 8 மணிக்கு பிறகும் பனிமூட்டம் நிலவியது. அதிக பனிப்பொழிவு காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள்  குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பனிபொழிவால் பாதிக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிக பனிப்பொழிவு நிலவியது. தஞ்சாவூர், திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொரடாச்சேரி, புனவாசல், ஒளிமதி, நீடாமங்கலம், அனுமந்தபுரம், முகுந்தனூர் பகுதிகளில் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மார்கழி மாதம் போல வீடுகள் சாலைகளில் பனிமூட்டம் சூழந்து. அதிகாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி குறைவான வேகத்தில் வாகன ஓட்டிகள் சென்றனர். திருத்தணி முருகன் கோயில் கோபுரம் மறையும் அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடுமையான குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.     

Related Stories: