2ம் நிலை காவலர்களுக்கான 3,552 பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 2.99 லட்சம் பேர் எழுதினர்:  சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள் என 3,552 காலிப்பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. 295 மையங்களில் நடந்த தேர்வை 2.99 லட்சம் பேர் எழுதினர் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,271 இரண்டாம் நிலை காவலர், 161 சிறை காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த பணியிடங்களுக்கு 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள், 59 திருநங்கைகள் என மொத்தம் 3,66,727 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி எழுத்து தேர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் ஆணையர்கள் ஆகியோர் துணைக்குழு தலைவர்களாகவும், ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி சென்னை உட்பட தமிழகத்தின் 35 நகரங்களில் உள்ள 295 மாவட்ட மையங்களில் எழுத்துத்தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணிக்கு முடிந்தது. எழுத்துத்தேர்வில் பிரிவு -1 தமிழ் மொழித்தகுதி தேர்வு 80 மதிப்பெண்கள், பிரிவு -2 முதன்மை எழுத்து தேர்வு 70 மதிப்பு பெண்களுக்கு வினாக்கள் கேட்டகப்பட்டது. வினாக்கள் சற்று கடினமாக இருந்தாலும், பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய பட்டதாரிகள், பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 2,99,820 பேர் எழுதினர்.

50க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வு எழுதினர். அதில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. மொத்தம் 81.76 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்வு எழுத அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கே பட்டதாரிகள், பொறியாளர்கள் குவிந்தனர். பெண்கள் பலர் கை குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளை தங்களது கணவர்களிடம் கொடுத்து விட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். அதேபோல், கர்ப்பணி பெண்களும் வந்தனர். இந்த தேர்வை பெரும்பாலும் பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்கள் அதிகளவில் எழுதினர்.

சென்னையை பொறுத்தவரை புது கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 16 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் 16,178 ஆண்கள், 2,852 பெண்கள், 9 திருநங்கைகள் தேர்வு எழுதினர். அதேபோல் கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் எழுத்துத்தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதாக சென்று வரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: