அருகில் இருந்து கடல் அலையை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் சிறப்பு நடைபாதை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக எளிதாக கடலை அருகில் இருந்து ரசிக்கும் வகையில், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குடும்பத்துடன் வந்து செல்லும் பொழுது போக்கு இடமாக உள்ளது. ஆனால், மாற்றுத்திறன் கொண்டவர்கள் கடல் அலையை, கடற்கரையை பக்கத்தில் இருந்து ரசிக்கும் நிலை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மெரினா கடற்பரப்பில் ஒரு பகுதியில் மாற்றுதிறனாளிகள் எளிதாக செல்வது குறித்து ஆலோசனை செய்தது. இதையடுத்து, சென்னை செல்பி பாயின்ட் பின்புறம் உள்ள கடற்பரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1.14 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைப் பாதையானது,  263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

முழுக்க முழுக்க மரக்கட்டைகளால் வடிமைக்கப்பட்டு, மழைநீர் வடிந்து போகும் வகையில், கைப்பிடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சிரமமின்றி கடலை அருகில் இருந்து ரசிக்கலாம். கடல் பரப்பில் எந்த இடத்தில் வேண்டுமானலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடை பாதை அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைப்பாதையை   உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் கடற்கரையில் கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளிடம் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்துகளை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

மாற்றுத்திறனாளிகளின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி ‘ட்ரீம் கம் ட்ரு’ என்கிறார். ஆம், பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: