×

கொஞ்சம் தின்றால்தான் என்ன?!

பூக்கள் அழகானவை... வாசனை மிகுந்தவை... அத்துடன் மகத்தான மருத்துவ குணங்களும் கொண்டவை. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அரோமா தெரபி போன்ற பல சிகிச்சைகள் பின்பற்றப்படுகின்றன. பூக்களிடமிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தப்படும் முறை இருப்பதுபோல், அதனை நேரடியாக உண்பதன் மூலமும் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். சில உதாரணங்கள் இங்கே..

செம்பருத்தி

செம்பருத்தியில் அடுக்கு செம்பருத்தி, ஒற்றை செம்பருத்தி என பல வகைகள் இருக்கின்றன. இதில் 5 இதழ்களுடன் சிவப்பு நிறம் கொண்ட செம்பருத்தி பூவில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. உணவில் செம்பருத்தியை சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் சீராகும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பெண்களின் கருப்பை நோய் அனைத்தும் குணமாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். மாதவிடாய் சுழற்சி சீராகும். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இதயம் பலம் பெறும்.

பன்னீர் ரோஜா

ரோஜாவில் வெளிர் ரோஸ் நிறத்தில் இருக்கும் பன்னீர் ரோஜா மட்டும்தான் உண்ணக்கூடியது. இதிலிருந்துதான் பன்னீா், குல்கந்து தயாரிக்கிறார்கள். Tannin, Cyanine, Carotene மற்றும் Chlorogenic போன்ற செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் பன்னீர் ரோஜாவில் இருப்பதால் சருமத்தில் வனப்பை ஏற்படுத்தும். ரத்தவிருத்திக்கு உகந்தது. உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உடலில் பித்தத்தை குறைக்கும். ரத்தத்தட்டுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

கல்யாண முருங்கை

கல்யாண முருங்கைப் பூக்கள் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று இருக்கும். பொதுவாகவே முருங்கைப்பூக்கள் ஆண்மையைப் பெருக்கும் தன்மையுடையன. வயிற்றுப் புழுக்களைப் போக்கும்; சிறுநீரை பெருக்கும்; தாய்ப்பாலை பெருக்கும். நீண்ட நாட்கள் மாதவிலக்கு ஏற்படாதவர்களுக்கும் மாத விலக்கைத் தூண்டும். கருப்பையை சுத்தமாக்கி உடல்பலத்தை அதிகரிக்கும். பெண்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாக கல்யாண முருங்கை நல்ல பலனளிக்கக்கூடியது.

பவளமல்லிப்பூ

வெள்ளை நிற இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனை உடைய பூ பவளமல்லிப்பூ. இதை பாரிஜாதம் என்றும் சொல்வார்கள். இரவில் பூக்கும் இந்த மலர்கள் காலையில் மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. மூலநோய், வயிற்றுக் கோளாறுகள், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகிறது. மூட்டுவலி, கல்லீரல் நோய், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது.

ஆவாரம்பூ

மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும் ஆவாரம்பூ சர்க்கரை நோய்க்கும், தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து. உடல்சூடு, நீர்க்கடுப்பை போக்கும்.

Tags :
× RELATED மெனோபாஸ் / பெரிமெனோபாஸ் ஆயுர்வேத கண்ணோட்டம்