மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்றும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்ப் செட், 9.75 லட்சம் குடிசை வீடுகள் மற்றும் 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 15ம் தேதி தொடங்கியது.

இருப்பினும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாங்கள் நடத்தப்படும் என மின்துறை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பண்டிகை தினங்கள் தவிர்த்து ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும்.

அதன்படி, மின்வாரிய உத்தரவின் அடிப்படையில் மின்நுகர்வோர் டிச.31ம் தேதி வரை எவ்வித சிரமும் இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி கட்டணங்களை செலுத்திக்கொள்ளலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை. மேலும், சிறப்பு முகாம்களுக்கு செல்ல நேரடியாக மின்நுகர்வோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் வாயிலாகவும், மின் கட்டண மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: