சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க 11 மெட்ரிக் டன் குளோரின்; பயன்பாடு குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 11 மெட்ரிக் டன் குளோரின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில், தினமும் குழாய், லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தம் 74.38 லட்சம் இணைப்புதாரர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னைக்கு அருகிலுள்ள வேறு சில உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சில பெரிய ஆலைகளுக்கும் குடிநீர் வாரியமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக 985 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னைக்கு மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக, புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. இதை தவிர மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமும் சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது.

இவற்றின் சுத்திகரிப்புத்திறன் நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் கன அடியாக இருந்தது. பிறகு நெம்மேலி நிலையமானது, மேம்படுத்தப்பட்டு இதன் சுத்திகரிப்புத் திறன் 110 மி.க. அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், சென்னை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்று குடிநீர் வாரியம் செயல்பட்டு வருகிறது. இதற்காக 1000 மில்லியன் லிட்டர் குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் பயன்படுத்தப்பட்டு பாதுகப்பான குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பருவமழையின் காரணமாக தினசரி 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னை குடிநீர் வாரியத்தால் தினசரி கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம், நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: