தடையை மீறி அண்ணாசாலையில் பைக் ரேஸ்; சிசிடிவி மூலம் 2 பேருக்கு வலை

சென்னை: அண்ணாசாலையில் போலீசாரின் தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட 2 வாலிபர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் சில இடங்களில் போலீசாரின் தடையை மீறி பைக் ரேஸ் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதன்படி, அண்ணாசாலையில் கடந்த சில நாட்களுக்கு முன், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் ஹைதரபாத்தை சேர்ந்த  கோட்லா அலெக்ஸ் பினோய் என்பதும், பைக் சாகசங்களில் ஈடுபடும் இவருக்கு 14  ஆயிரம் பாலோயர்ஸ் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து, தேடி வந்தனர். இந்நிலையில், முன்ஜாமீன் ேகாரி அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசுரங்கள் வழங்க வேண்டும் என நூதன தண்டனை வழங்கினர்.

அதன்படி, அண்ணாசாலை தேனாம்பேட்டை சிக்னலில் சாலை  பாதுகாப்பை மதிக்க வேண்டும், பைக் சாகசங்கள் வேண்டாம் என்ற வாசகங்கள்  அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று மாலை 5.10 மணி அளவில் இரண்டு பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென தங்களது பைக்குகளில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஸ்பென்சர் சிக்னல் வரை அதிவேகமாக சென்றனர். அதோடு இல்லாமல் அவர்கள் இருவரும் பைக் சாகசத்திலும் ஈடுபட்டனர். இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்தனர். வயதான வாகன ஓட்டிகள் இவர்களின் பைக் சாகசத்தால் வாகனத்தை இயக்க அச்சமடைந்து, சாலையோரம் நிறுத்தினர். பின்னர் அவர்கள் சென்ற பிறகு தங்களது வாகனங்களில் சென்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் படி அண்ணாசாலை போக்குவரத்து போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: