பாதியில் நிற்கும் கால்வாய் பணி பல்லாவரம் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்; சீரமைக்க கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், பல்லாவரம் பழைய மீன் மார்க்கெட் அருகே கால்வாய் பணி பாதியில் நிற்பதால், அதில் இருந்து கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும், இவ்வழியே வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீர் சிதறி பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது விழுவதால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், சாலையில் தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், சுற்றுப் பகுதி மக்கள் தொற்று நோய் பீதியில் உள்ளனர்.

 

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால், கழிவுநீர் தேங்குவதை தடுத்து, மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கால்வாய் பணி முழுமையாக நிறைவடையாததால் திறந்த நிலையில், கம்பிகள் அபாயகரமாக உள்ளது. இங்கு எச்சரிக்கை பதாகைகள் கூட இல்லாததால் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிப்பவர்கள் தவறி கழிவு நீர் கால்வாய் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து கால்வாய் பணிகளை முடித்து, விபத்தில் இருந்தும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: