தமிழகம் முழுவதும் ரூ.84 கோடியில் 3,808 ஊரக நூலகங்களின் கட்டிடங்கள் புதுப்பிப்பு; புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்க நடவடிக்கை

சேலம்: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும், 3,808 ஊரக நூலக கட்டிடங்கள் ரூ.84.27 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. அத்துடன் புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக  ஆட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 12,618 ஊரக நூலகங்கள் துவங்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகளில், ஊரக நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் இருந்தது. கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்தையடுத்து, ஊரக நூலகங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

 அதன்படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12,525 ஊரக நூலகங்களையும் 3 ஆண்டுகளில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 2021-2022ல் 4,116 நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டன. 2ம் கட்டமாக 2022-23ல் 3,808 நூலகங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணையை அரசு முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார். அதில், நூலகங்களை புனரமைக்க ரூ.55.71 கோடி, பர்னிச்சர்கள் வாங்க ஒரு நூலகத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.9.52 கோடி, புதிய புத்தகங்கள் வாங்க ஒரு நூலகத்திற்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.19.04 கோடி என மொத்தம் ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

ஊரக நூலகக் கட்டிடங்களை பழுதுபார்த்து, புதுப்பித்து, புதியத் தோற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளமும், கழிப்பறை இல்லாத இடங்களில், புதிய கழிப்பறையும் அமைக்கப்படுகிறது.   ஊரக நூலகங்களுக்கு ஏற்கனவே 6 அலமாரிகள், 2 வாசிப்பு மேசைகள், ஒரு நூலகர் மேசை, ஒரு எஸ் வடிவ நாற்காலி மற்றும் 14 நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றுக்கு பதிலாக புதியவை வழங்கப்படும். அதே சமயம், பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவற்றுக்கு பதிலாக புதியதாக வாங்குவதற்கு, ஒரு நூலகத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஏற்கனவே நூலகங்களுக்கு குழந்தைகள், இளைஞர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மிகச்சிறந்த ஆளுமைகள், புதினங்கள், மரபுக்கவிதைகள் மற்றும் போட்டித் தேர்வுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தற்போது கூடுதலாக ஒவ்வொரு நூலகத்திற்கும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: