தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மேலும் பல புதிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் தேவை; ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை

விருதுநகர்: தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய, மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுப்பணிகளைத் தொடங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில், திருக்கொடுங்குன்றம் கல்வெட்டுகள், திருத்தங்கல் தொல்லியல் ஆய்வுகள், பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய 3 நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நூல்களை வெளியிட, கலெக்டர் மேகநாதரெட்டி பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் வரலாற்று பதிவுகளில் தன்னுடைய தடத்தை அழுத்தமாக பதித்த மாவட்டமாகும்.

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்கள் வசிக்கும் பகுதியாக, பண்பாட்டு தொடர்ச்சியாக இன்றைக்கும் இம்மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் வரலாற்று செய்திகள் ஏராளமாக உள்ளன. வெம்பக்கோட்டை அகழாய்வு குறித்து புத்தகத் திருவிழாவில் தனி அரங்கம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் மேலும், பல புதிய இடங்களில் தொல்லியல்துறை ஆய்வு நடைபெற வேண்டும். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும். குறிப்பாக, பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில், தொல்லியல் ஆய்வு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெறும். இதனால், தமிழகத்தின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இந்தியாவின் வரலாற்றை, தென்கோடியிலிருந்து எழுதும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட வேண்டும்’’ என்றார்.

Related Stories: