டிராக்டர் வாங்கிக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் கைது; அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே, டிராக்டர் வாங்கிக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (63). இவரது மனைவி ரங்கம்மாள். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி பாப்பாக்குடியிலும், பந்தல்குடியிலும் வசிக்கின்றனர். மகன் குருமூர்த்தி மனைவியுடன் வாழ்வாங்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாக்கியராஜ் தனது பணத்தில் மகனுக்கு விவசாய வேலைக்கு டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். அதை வாடகைக்கு ஓட்டி கிடைக்கும் பணத்தில் ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு மீதியை தவணைப் பணம் கட்ட தரும்படி மகனிடம் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக டிராக்டர் ஓட்டிய பணத்தை குருமூர்த்தி தந்தையிடம் கொடுக்கவில்லையாம்.

இதுபற்றி நேற்று முன்தினம் பாக்கியராஜ் கேட்டபோது, ‘என்னிடம் பணத்தை வாங்கி, மகள்களுக்கு கொடுக்கப் போகிறாயா’ என கூறி தகராறு செய்துள்ளார். உடனே பாக்கியராஜ், ‘எனது பணத்தை கொடு அல்லது டிராக்டரை கொடு’ என கேட்கவே ஆத்திரமடைந்த குருமூர்த்தி அன்று இரவு வதுவார்பட்டிக்கு சென்று, வீட்டிற்குள் தனியாக கட்டிலில் தூங்கிய தந்தை பாக்கியராஜ் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு, கதவை வெளியே பூட்டிச் சென்றார். உடல் தீப்பற்றி எரிந்த நிலையில், தானே தீயை அணைத்த பாக்கியராஜ், செல்போன் மூலம் பாப்பாக்குடியில் உள்ள மகளிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்து வந்த மருமகன் வீட்டின் பூட்டை உடைத்து மாமனாரை காப்பாற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பாக்கியராஜ் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து, குருமூர்த்தியை கைது செய்தனர்.

Related Stories: