×

2வது ஒருநாள் போட்டி; கனமழையால் ரத்து

ஹாமில்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி, கனமழை காரணமாக கைவிடப்பட்டது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. ஆக்லாந்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாம் லாதம் - கேன் வில்லியம்சன் ஜோடியின் அபார ஆட்டத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஷர்துல் தாகூர், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் சாஹர், தீபக் ஹூடா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக மைகேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. மழை காரணமாகத் தாமதமாக தொடங்கிய போட்டியில், கேப்டன் தவான் - ஷுப்மன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்தியா 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, தலா 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். தவான் 3 ரன் எடுத்து ஹென்றி பந்துவீச்சில் பெர்குசன் வசம் பிடிபட்டார். அடுத்து ஷுப்மனுடன் அதிரடி வீரர் சூரியகுமார் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, இந்திய ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்திய 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்த நிலையில், மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. கில் 45 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), சூரியகுமார் 34 ரன்னுடன் (25 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கனமழை தொடர்ந்ததால், ஆட்டம் முடிவு இல்லாத நிலையில் கைவிடப்பட்டது. நியூசிலாந்து 1-0 என தொடர்ந்து முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.



Tags : 2nd ODI; Canceled due to heavy rain
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...