கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்காக வங்கியில் 4,000 கிலோ தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மண்டலத்துக்கு 4 கோயில்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி, கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்தேர் நிறுத்தும் மண்டப கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்:

‘‘2022-23ம் ஆண்டில் ரூபாய் 1,000 கோடி செலவில் 1,500 கோயில்களை புனரமைக்கின்ற பணி நடந்து வருகிறது. அதேபோல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக, கலை நயத்தோடு இருக்கின்ற கோயில்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டு, அரசு நிதியாக ரூபாய் 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அதில் 60 கோயில்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது 409 கோயில்கள் கணக்கிடப்பட்டு படிப்படியாக அனைத்து தொன்மை வாய்ந்த கோயில்களும் புனரமைத்து, பாதுகாக்கின்ற பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.  அன்னதானத் திட்டத்தை பொறுத்தவரை அந்தந்த கோயிலின் நிதிஆதாரத்தை பொறுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டத்தையும், 10 கோயில்களில் அன்னதானத் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளோம்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோயிலுக்கு நடைபயணமாக வருகை தரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 பேர் வீதம் 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளோம். திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோயில்களிலும் பயன்படுத்த இயலாத தங்க நகைகள் நீதிபதி முன்னிலையில் முழுமையாக அளவிடப்பட்டு, சுத்தத் தங்கமாக மாற்றிட தற்போது மும்பைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் குறைந்தபட்சம் 4,000 கிலோ தங்கமாவது, கோயில் வளர்ச்சிப் பணிகளுக்காக கோயில் பெயரிலே வைப்பு நிதியாக வைக்கப்படும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, எபினேசர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், அறநிலைத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் பாஸ்கரன், கோயில் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், கோயில் மேலாளர்கள் தனசேகர், நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: