×

அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகிறது

புதுடெல்லி: அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை  வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை பெறவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரவும் பிறப்பு சான்றிதழ் ஓர் முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. ஆனாலும், 1990ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களில் பலருக்கும் பிறப்பு சான்றிதழ் இல்லாததால் அவர்கள் பிற ஆவணங்களை கொடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர்.

இதேபோல், இறப்பு சான்றிதழும் பலர் முறையாக பெறுவதில்லை. இதனால், அரசு திட்டங்கள் பெறுவதில் குளறுபடி, போலி வாக்காளர் பெயர்கள் அதிகரிப்பு, சொத்துகள் பிரிப்பதில் தகராறு என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-ன் கீழ்  ஏற்கனவே பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் 7ம்  தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில்,  பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா  தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த வரைவு மசோதாவை கொண்டு வருவது  தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டன. அதன்படி  மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு,  இச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் சேர்த்துள்ளோம்.

இந்த  மசோதாவை சட்டமன்றத் துறை ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய அமைச்சரவையின்  ஒப்புதலுக்காக வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வரவிருக்கும்  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 17 அமர்வுகள் மட்டுமே இருப்பதால், மசோதா  மீதான விவாதங்கள் அடுத்த அமர்வில் விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியப்  பதிவாளர் ஜெனரல் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள்  பராமரிக்கப்படுகிறது. அவர்களின் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர்  பதிவேடு, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமத்  தரவுத்தளங்களையும் புதுப்பிக்க முடியும்.

இந்த மசோதா நிறைவேறினால், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர்  உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்பிப்பது  கட்டாயமாக்கப்படுகிறது.  பிறப்புச் சான்றிதழ் மூலம் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு,  அடுத்தடுத்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சான்றிதழ்களை ஆன்லைனில்  உடனடியாக வழங்க முடியும். உதாரணத்திற்கு 18 வயதாகும்போது சம்பந்தப்பட்ட  நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்.

அதே நபர்  இறந்துவிட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தானியங்கி  முறையில் எளிதாக நீக்கிவிட முடியும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய  அவசியம் இருக்காது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இறப்புச் சான்றிதழ்களின் நகலை கட்டாயமாக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும்போது இறப்புக்கான காரணத்தையும் குறிப்பிடுவதை கட்டாயமாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தகவல்களை ஒன்றிணைக்கலாம்    
ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தங்கள் மூலம், அனைத்து தரவுத்தளங்களையும் ஒன்றிணைக்க முடியும். பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால், 2010ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை புதுப்பிக்கவும், 2015ல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் திருத்தியமைக்கப்பட்ட தரவைப் புதுப்பிக்கவும் முடியும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஏற்கனவே 119 கோடி மக்களின் தரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* பிறப்பு சான்றிதழ் ஒருவரின் குடியுரிமைக்கான சட்டப்பூர்வமான அத்தாட்சியாகும்.
* முழுமையான பெயருடன் பெறப்படும் பிறப்புச் சான்றிதழ்தான் சட்டப்பூர்வமானது.
* பிறப்பு-இறப்புப் பதிவுச் சட்டம் 1969-ம் படி, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் அதற்கான விவரங்களை பதிவு செய்து பிறப்பு சான்றிதழை பெற வேண்டும்.


Tags : Parliament , Govt job, driving license, voter card, birth certificate is mandatory
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...