×

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் ‘வானவில் மன்றம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.25 கோடி மதிப்பிலான ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்கீட்டின்கீழ் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்விக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
 
இதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா எனும் திட்டத்தை துவங்கியுள்ளனர். இதில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியம், பண்பாடு, கலைத்திறன்களை அறியும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பள்ளியளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும், அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் நிலையில், அம்மாணவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பரிசுகள் வழங்கவிருக்கின்றனர்.
 
இந்நிலையில், மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிக ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். தமிழக சட்டசபையில், 2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த வானவில் மன்றம் துவங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதே. இத்திட்டம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும். எதையும் ஆராய்ந்து பார்த்து, கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கும். அறிவியல், கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும். குழந்தைகளிடையே இயல்பாக உள்ள படைப்பாற்றலை ஊக்குவித்து, புதுமை காணும் மனப்பாங்கை வளர்த்தெடுக்கும். அதேபோல், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் அறிவியலை உணர செய்யும் வகையில் பயனடைவர்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலை எளிதாக்கி, மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. இத்திட்டத்தில் கையாளும் வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனை வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏதுவாளர்களாக செயல்படுவர்.

இதற்கென முதல் கட்டமாக 100 மோட்டார் சைக்கிள்கள் கருத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு, தமிழக அளவில் நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக 6 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனை கருவிகளை உடன் எடுத்து சென்று, பள்ளிகளில் ஆசிரியர்களின் துணையுடன் கருத்தாளர்கள் பரிசோதனை செய்து காண்பிக்கின்றனர். மேலும், வாரம்தோறும் ஆசிரியர்களுக்கு அறிவியல், கணித வல்லுநர்களுடன் இணையவழி (டெலிகிராம்) கலந்துரையாடல் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இடங்களுக்கு சென்று, நேரடி அனுபவம் பெறுவதற்கும் வானவில் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் எதிர்வரும் காலங்களில் தங்களின் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் முழுமையான படைப்பாற்றல்களை வெளிக்கொணர வானவில் திட்டம் வழிவகுக்கும் வகையில் பயனுள்ளதாக அமையும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உறுதி தெரிவிக்கின்றனர்.

Tags : forum ,CM K. Stalin , 'Rainbow Forum' project to stimulate interest in science and mathematics among government school students: Chief Minister M.K. Stalin inaugurates the day
× RELATED அதிமுக மன்ற கட்டிடத்தில் அத்துமீறி...