×

அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற, கல்வி நிறுவனங்களில் சேர பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது

புதுடெல்லி: அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம். இதற்காக, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிச. 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒன்றிய அரசு சில முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-ன் கீழ் ஏற்கனவே பிறப்பு  மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஒன்றிய மற்றும் மாநில அரசுப்  பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக்கும் சட்டத்தை மேலும் வலுவாக்கி அதனை அரசின் ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்வதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் மூலம் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு, அடுத்தடுத்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சான்றிதழ்களை ஆன்லைனில் உடனடியாக வழங்க முடியும்.

உதாரணத்திற்கு 18 வயதாகும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வாக்காளர்  பட்டியலில் சேர்க்க முடியும். அதே நபர் இறந்துவிட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தானியங்கி முறையில் எளிதாக நீக்கிவிட முடியும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றாலும் கூட, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் திருமணங்களைப் பதிவு செய்தல் போன்ற அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மேலும் சில விஷயங்களை முன்மொழிவு செய்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘வரும் 7ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த வரைவு மசோதாவை கொண்டு வருவது தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டன. அதன்படி மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு, இச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் சேர்த்துள்ளோம்.

இந்த மசோதாவை சட்டமன்றத் துறை ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 17 அமர்வுகள் மட்டுமே இருப்பதால், மசோதா மீதான விவாதங்கள் அடுத்த அமர்வில் விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரல் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் பராமரிக்கப்படுகிறது.

அவர்களின் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமத் தரவுத்தளங்களையும் புதுப்பிக்க முடியும். சிவில் பதிவு மையம் அளித்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் பிறப்புகளின் பதிவு 2010ல் 82.0 சதவீதமாகவும், 2019ல் 92.7 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 2010ல் 66.9 சதவீதமாகவும், 2019ல் 92.0 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

ஒன்றிணையும் தரவுகள்: அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் சிவில் பதிவு மையம் மூலம் பிறப்பு - இறப்பு பதிவுகளை பதிவு செய்கின்றன. குஜராத், சட்டீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, கேரளா, கர்நாடகா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சொந்தமாக பதிவு ஆவணங்களை பராமரிக்கின்றன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ போன்ற சில யூனியன் பிரதேசங்கள் ஒன்றிய அரசின் மூலம் பதிவுகளை செய்கின்றன. டெல்லி, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்கள் தனியாக பதிவு செய்கின்றன. ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தங்கள் மூலம், அனைத்து தரவுத்தளங்களையும் ஒன்றிணைக்க முடியும். பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால், 2010ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை புதுப்பிக்கவும், 2015ல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் திருத்தியமைக்கப்பட்ட தரவைப் புதுப்பிக்கவும் முடியும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஏற்கனவே 119 கோடி மக்களின் தரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Birth certificate mandatory for government jobs, driving license, passport, admission to educational institutions: Birth-Death Registration Amendment Bill to be tabled in Parliament session
× RELATED கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான...