இன்று 45வது பிறந்த நாள்; முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 45வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து, உச்சி முகர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பி.ேக.சேகர் பாபு, கே.ஆர்.பெரிய கருப்பன், வெள்ளக்கோவில் சாமிநாதன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி, பகுதி செயலாளர் மதன்மோகன் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப்டத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் கனிமொழி எம்பி, பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், செந்தில் பாலாஜி, தா.மோ.அன்பசரன், மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், ஆர்.காந்தி, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சிவசங்கரன், மதிவேந்தன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு எம்எல்ஏ, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, சிற்றரசு, இளைய அருணா, க.சுந்தர், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், பரந்தாமன், இ.கருணாநிதி, கிருஷ்ணசாமி, ஐட்ரீம் ஆர்.மூர்த்தி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன்,  திமுக மாணவர் அணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி, தென் சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் வார்டு 62 பம்பிங் ஸ்டேசன் குடியிருப்பு பகுதியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மே தின பூங்காவில் நாற்று பண்ணை தொடங்கி வைத்தார். அதன் பிறகு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து வார்டு 116ல் மாவட்ட இளைஞர் அணி சார்பில் வி.ஆர்.பிள்ளை தெரு சமுதாய நலக்கூடத்தில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை கைலாசபுரத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகமாக அன்பகத்தில் தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை உதயநிதி ஸ்டாலின் பெற்றார். அவருக்கு திமுக முன்னணியினர், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால், சென்னை அன்பகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட திமுக இளைஞர் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ஆதரவற்ற நிலையங்களில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது.

மேலும் பல்ேவறு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன. மேலும் இல்லந்தோறும் சென்று உறுப்பினர் சேர்த்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற.  அது மட்டுமல்லாமல் இன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுகவினர் வழங்கினர். இதே போல மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் நன்றி: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறியதாவது: தமிழகம் முழுவதும் இளைஞர் அணி பாசறை கூட்டம் தொடர்ந்து நடைபெறும். எனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி. மக்களுக்கான பணி செய்வதே உறுதி மொழியாக எடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: