தேர்தல் முன்விரோதத்தில் பயங்கரம்; ஒரு வருடம் காத்திருந்து பாமக நிர்வாகியை வெட்டிக் கொன்றோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

விக்கிரவாண்டி: உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக பாமக பிரமுகரை ஒரு வருடம் காத்திருந்து வெட்டி கொலை செய்ததாக கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (45), பாமக மாவட்ட துணைத் தலைவர். இவர் கடந்த 24ம் தேதி வாகனத்தில் பனையபுரத்தில் இருந்து கப்பியாம்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மண்டபம் பெட்ரோல் பங்க் அருகில் அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆதித்தனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த ராமு மற்றும் அவரது கூட்டாளிகள் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமு மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பாமக நிர்வாகி கொலை தொடர்பாக பேரணி பேருந்து நிலையம் அருகில் பதுங்கி இருந்த ராகவன்(32), மதன் (எ) மதன்குமார் (21), ராமு(42), குயில் (எ) லட்சுமி நாராயணன் (41), விஷ்ணு (34), வினோத் (32), தேவநாதன் (48) ஆகிய ஏழு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராமு மற்றும் ஆதித்தன் ஆகிய இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு தக்க சமயம் வரும் வரை காத்திருந்த பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த 24ம் தேதி ஆதித்தனை ராமு தரப்பினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர் என்று போலீசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் பரந்தாமன் மற்றும் நாராயணமூர்த்தி ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இப்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: