குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஆம்ஆத்மி கூட்டத்தில் கற்கள் வீச்சு: சிறுவனுக்கு காயம்; பாஜகவினர் அடாவடி

கதிர்காம்: கதிர்காமில் நடந்த ஆம்ஆத்மி தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவினர் கற்களை வீசியதாக மாநில ஆம்ஆத்மி தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல்  நடைபெறுகிறது. ஆளும் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள  நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆம்ஆத்மி, காங்கிரஸ்  கட்சிகளும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் கதிர்காம் சட்டமன்றத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி பிரசாரம் செய்த போது, மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் கோபால் இத்தாலியா கூறுகையில், ‘கதிர்காம் சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில்,  பாஜக குண்டர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.

சிறுவன் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், அவர்கள் எதற்காக கற்களை வீசி தாக்க வேண்டும்? கற்களை வீசும்  பாஜகவினருக்கு எதிராக துடைப்பத்தின் (ஆம்ஆத்மி சின்னம்) மூலம் மக்கள்  தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்றார்.

Related Stories: