திருச்சானூரில் நாளை பஞ்சமி தீர்த்தத்துடன் பிரமோற்சவம் நிறைவு: தெப்பகுளத்தில் நீராட 3 இடங்களில் பக்தர்களுக்கு சிறப்பு மையங்கள்

திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் கடைசி நாளான தாயார் தோன்றிய பத்மசரோவரத்தில் (தெப்பக்குளத்தில்) நாளை  பஞ்சமி தீர்த்தம் நடைபெற உள்ளது.  இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்  புனித நீராட உள்ளனர். இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தலைமையில்   முதன்முறையாக  பக்தர்கள் தங்குவதற்கு  நவஜீவன் கண் மருத்துவமனை, புடிப்பாதை, மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பகுதிகளில்  பக்தர்கள் காத்திருக்கும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்ப தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்றிரவு முதல் இங்கு அன்னதானம், குடிநீர், பாதம் பால் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ்  மேற்பார்வையில் பஞ்சமி தீர்த்தத்தில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க  தேவையான வரிசைகள், தடுப்புகள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக வழிக்காட்டி பலகைகள்  அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு துறை, சாரணர், என்சிசி மாணவர்களுடன் இணைந்து மாவட்ட போலீசார்  2,500 தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றிரவு திருச்சானூருக்கு வரக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.  அதன்படி நிரந்தர, தற்காலிக, நடமாடும் கழிப்பறைகள் என சுமார் 500 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய கூடுதலாக 700 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 3 நிழற் பந்தல்களில் 3 முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இதுதவிர தொல்லப்பா தோட்டம் மற்றும் கோயிலில் கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது.  இவை தவிர 108ம் ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  சுவிம்ஸ், ரூயா மற்றும் தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவமனைகளின் மருத்துவர்கள் பக்தர்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.  தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சமி தீர்த்தத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஷில்பரம், தனப்பள்ளி சந்திப்பு, மாங்காய் மண்டி, ராகுல் கன்வென்ஷன் சென்டர், புடி சந்திப்பு மற்றும் திருச்சானூர் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி தெப்பகுளத்திற்கு நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பல்வேறு இடங்களில் வாரி சேவா தன்னார்வலர்கள் ஆயிரம் பேர் பஞ்சமி தீர்த்தத்தில் பக்தர்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.

பக்தர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 3 நிழற்பந்தல்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பஞ்சமி தீர்த்தம் நிகழ்ச்சியை காண தெப்பகுளம், மாட வீதிகளின் 4 புறமும் தற்காலிக நிழற்பந்தல், எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக நிழற் பந்தல்களில்  இருந்து பக்தர்கள் தெப்பகுளத்திற்கு தொடர்ந்து அனுப்ப சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.  பக்தர்கள், காவல்துறை, தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் ஒத்துழைத்து அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை(திங்கட்கிழமை காலை 11.40 மணி முதல் 11.50 மணிக்குள் பத்மபுஷ்கரிணியில் அர்ச்சகர்களால் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி  நடத்தப்படும். இருப்பினும், பஞ்சமி தீர்த்த பலன் நாள் முழுவதும் இருக்கும் என்பதால் பக்தர்கள் பொறுமையை கடைப்பிடித்து புனித நீராட வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: