நிலக்கோட்டை அருகே கிணற்றில் பெண் குழந்தை மர்ம சாவு: போலீசார் தீவிர விசாரணை

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கிணற்றில் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருபவர் பாலு (42). இவரது அக்கா மகள் துர்காதேவி (26). இவருக்கும், எரியோட்டை சேர்ந்த ராஜதுரைக்கும்(31), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாட்டால், தம்பதியினர் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு துர்காதேவி தனது குழந்தையுடன், சிலுக்குவார்பட்டியில் மாமா பாலுவின் தோட்டத்திற்கு வந்து தங்கியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போய்விட்டது. இரவு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

நேற்று காலை வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குழந்தை ரித்திகா பிணமாக மிதந்துள்ளது. தகவலறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: