×

பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கங்கள் சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணி நடத்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த புதிய சட்டங்களினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக கூறி விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அரசு உறுதியளித்தது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் நேற்று விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். லக்னோ பேரணியில் பங்கேற்ற சம்யுக்தா கிசான் மோர்சா தலைவர் ஹன்னான் மொல்லா  கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு எங்களுக்கு கோரிக்கைகளை ஏற்று எழுத்து மூலமாக ஒப்புதல் அளித்தனர். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. நாட்டின் விவசாயிகளை ஏமாற்றும் துரோகி என்பதை அரசு நிரூபித்துள்ளது. அரசு கார்ப்பரேட்டுக்களை பாதுகாக்கிறது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்’’ என்றார்.

Tags : Governor's ,House , Farmers rally towards Governor's House in various states
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...