போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சமூக விரோதிகளிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க புதிய சட்டம்: குஜராத்தில் பாஜ தேர்தல் அறிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் போராட்டம் என்ற பெயரில் பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீட்டை வசூலிக்க புதிய சட்டம்  உட்பட பல்வேறு வாக்குறுதிகளை பாஜ தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் சட்டப்பேரவை இரண்டு கட்டமாக நடக்கிறது. பாஜ தனது தேர்ல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். தீவிரவாத ஸ்லீப்பர் செல்களை அடியோடு ஒடுக்குவது போல, உள்நாட்டில் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டிவிடுவோரையும் கண்டறிய சிறப்பு பிரிவு தொடங்கப்படும்.

மேலும், போராட்டங்களின் போது வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டு பொது மற்றும்  தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் சமூக விரோதிகளிடம் இருந்து அதற்கான இழப்பீடு தொகையை வசூலிக்க ‘பொது மற்றும்  தனியார் சொத்துக்களின் சேதங்களை  குஜராத் மீட்டெடுக்கும் சட்டம்’  இயற்றப்படும்.

இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும். 2 லட்சம் வரை பிணையில்லாத கடனுடன் தொழிலாளர்களுக்கு ஷ்ராமிக் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். தேவபூமி துவாரகா நடைபாதையில் உலகின் மிக உயரமான ஸ்ரீகிருஷ்ணர் சிலையை அமைத்து மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக மையமாக நிறுவப்படும். பெண்களுக்கு மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: