எல்லையில் ஊடுருவிய பாக். டிரோன் சுட்டு வீழ்த்தல்

சண்டிகர்: பாகிஸ்தான் பகுதியில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரசில் சர்வதேச எல்லைக்குள் நுழைந்த டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டோகே கிராமம் அருகே இந்திய பிராந்தியற்குள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று நுழைந்தது. இதனை பார்த்து உஷாரான வீரர்கள் டிரோனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டிரோன் கீழே விழுந்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்தி வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனின் சேதமடைந்த பாகத்தை கண்டுபிடித்தனர். இது சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோனாகும். இதேபோல் பெரோஸ்பூரில் குருஹர்சஹாயில் பகதூர் கே எல்லை புறக்காவல்நிலையம் அருகே, பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறக்கவிடப்பட்ட கார்டூன் வரையப்பட்ட பலூன் ஒன்றை கைப்பற்றினார்கள். இதில் பலூனில் பாகிஸ்தானின் ரூ.10 நோட்டு மற்றும் துண்டு சீட்டில் செல்போன் எண் எழுதி இணைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து எல்லைப்பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: