வேலூரில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேருவதற்கு 3 மாநில பெண்கள் ஆர்வம்; நாளை மறுதினம் வரை முகாம் நடக்கிறது

வேலூர்: வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 3 மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ஆர்முடன் பங்கேற்றனர். பெண் விண்ணப்பதாரர்களுக்கான இந்த முகாம் நாளை மறுதினம் வரை நடக்கிறது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடந்த 15ம் தேதி முதல் வரும் 29ம் தேதி(நாளை மறுதினம்) வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை ஆண்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று முதல் நாளை மறுதினம் வரை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவ பணிக்கு விண்ணப்பித்த பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.

நேற்று நள்ளிரவு தொடங்கிய முகாமில் பங்கேற்க நேற்று காலை முதலே தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பெண்கள் ரயில், பஸ்கள் மூலம் தேர்வு நடைபெறும் மைதானத்திற்கு ஆர்வமுடன் வர தொடங்கினர். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஆட்சேர்ப்பு பணி தொடங்கியது. முதலில் உயரம் அளவீடும், பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பும் நடக்கிறது. தொடர்ந்து ஓட்டம் விடப்படுகிறது. ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள இளம்பெண்களுடன், பெற்றோர்கள் பாதுகாப்பிற்காக உடன் வந்திருந்தனர்.

Related Stories: