எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பழுது என புகார்; ஒரே வாரத்தில் 2வது முறையாக நள்ளிரவில் பயணிகள் போராட்டம்

அரக்கோணம்: எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பழுது காரணமாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு 10.55 மணி அளவில் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே ஏசி சரிவர செயல்படவில்லையாம். இதனால், சில பயணிகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இந்த ரயில் இரவு 11.52க்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. அப்போது, ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் திடீரென கீழே இறங்கி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகளிடம் பயணிகள் ‘ஏசி பழுதை சரி செய்யாவிட்டால், ரயிலில் பயணம் செய்ய மாட்டோம்’ என தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் ஏசி இயந்திரத்தில் பழுதை தற்காலிகமாக சரி செய்தனர். பின்னர் அதிகாரிகள், காட்பாடி சென்றதும் முழு அளவில் சரி செய்யப்படும் என்றனர்.

இதற்கு பயணிகள், சென்னை சென்ட்ரலில் புறப்படும்போது அரக்கோணத்தில் சரிசெய்யப்படும் என்றனர். இப்போது காட்பாடி என்கிறீர்களே? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள், காட்பாடி செல்வதற்குள் ஏசி நிச்சயம் சரியாகிவிடும். அல்லது அங்கு சரி செய்யப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையேற்று, பயணிகள் ரயிலில் ஏறினர். இந்த போராட்டம் காரணமாக 55 நிமிடம் தாமதத்திற்கு பிறகு நள்ளிரவு 12.47 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. காட்பாடி ரயில் நிலையம் சென்றதும் ஏசி பழுது முழுமையாக சரி செய்யப்பட்டு, பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. ஏற்கனவே, கடந்த 20ம் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக குஜராத் சென்ற ஏக்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி வேலை செய்யவில்லை எனவும், தரமற்ற தலையணை மற்றும் போர்வை வழங்கியதாகவும் கூறி  அரக்கோணத்தில் நள்ளிரவு ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: