வனத்துறையில் 10 ஆண்டு பணி முடித்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு வனக்காவலர் பணி உயர்வு: அமைச்சர் ராமசந்திரன் தகவல்

சத்தியமங்கலம்: வனத்துறையில் 10 ஆண்டு பணி முடித்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு வனக்காவலர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ளும் வகையில் ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் கட்டும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பவானிசாகர் அருகே காராச்சிக்கொரை வனப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பழங்குடியினர் அருங்காட்சியகத்தை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்: வனத்துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு வனக்காவலர் பணி பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதவி உயர்வு வழங்குவதில் பழங்குடியினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்ற இனத்தவருக்கும் பதவி உயர்வு வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சரிவர விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத நிலையில் தற்போது விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய தாவரங்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: