மலையில் இருந்து அடிவாரத்துக்கு ‘ரோப் கார்’ முறையில் சாராயம் விற்பனை; போலீசை கண்டதும் கும்பல் ஓட்டம்

ஆற்காடு: ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கே.கே.தோப்பு மலையடிவாரத்தில் நூதன முறையில் சாராயம் விற்பனை செய்வதாக திமிரி போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ஒரு கும்பல் ‘ரோப் கார்’ முறையை பின்பற்றி, மலை மீது உள்ள மரத்திலிருந்து அடிவாரத்தில் உள்ள ஒரு  மரக்கிளையை இணைத்து கம்பியை கட்டி வைத்திருந்தனர். அதில் பிளாஸ்டிக் பக்கெட்டை கட்டிவிட்டு, மலை மீது இருந்தபடியே கீழே விட்டு கொண்டிருந்தனர்.

இதில் சாராயம் வாங்குபவர்கள் எத்தனை பாக்கெட்டுகள் சாராயம் தேவையோ அதற்கான தொகையை பக்கெட்டில் வைத்தால், அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பக்கெட்டில் சாராய பாக்கெட்டுகளை வைத்து அனுப்பி கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் மலையின் மறுபகுதியில் இறங்கி  தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து நீளமான கம்பி, பக்கெட், லாரி ட்யூப் மற்றும் சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: