திருவண்ணாமலையில் ரூ.30 லட்சத்தில் புதுப்பிப்பு சுப்பிரமணியர் தேர்; வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக வரும் 6ம் தேதி மகா தீப பெருவிழாவும் நடைபெற உள்ளது.  7ம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் பஞ்ச ரதங்கள் வலம் வரும்.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த பஞ்ச ரதங்களும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சுப்பிரமணியர் தேர் பீடத்தை தவிர்த்து, அதன் மீதுள்ள விதான பகுதிகள்  முற்றிலுமாக ரூ.30லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேரடி வீதியில் இருந்து மாட வீதிகளில் வலம் வந்து பகல் 2.45 மணிக்கு நிலையை அடைந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்திப் பெருக்குடன் முழக்கமிட்டனர்.

மகாதீபம் ஏற்ற ஆவினில்  ரூ.27 லட்சத்துக்கு நெய் கொள்முதல்:  திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி டிசம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், மற்றும் ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர அக்மார்க் நெய், ரூ.27 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 15 கிலோ எடையுள்ள 300 டின்களில் வழங்கப்பட்டுள்ள முதல் தர அக்மார்க் முத்திரை பதித்த ஆவின் நெய், கோயில் மடப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நெய் காணிக்கையை ரொக்கமாக செலுத்தவும், நெய்யாக செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. அதன்படி, ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தலாம்.

Related Stories: