×

பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு அடைய விரைவில் மகளிருக்காக நல்ல சட்டத்தை பேரவையில் முதல்வர் கொண்டு வருவார்; சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: சென்னை பசுமைவழி சாலையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் நடவடிக்கை உதவி சங்கம் சார்பில் “அரசியலமைப்பு சட்டம் நாள்” விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதை தொடர்ந்து, வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பு உறுதி செய்வதற்கான அனைத்து தரப்பு பங்கேற்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசியதாவது: மாநில மனித உரிமைகள் ஆணையத்தை கலைஞர் உருவாக்கினார். வீட்டில் வேலை செய்கிற பெண்களுக்கு வாரியம் ஒன்றை 2007ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமைத்தார். அந்த வாரியம் பற்றி தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு இல்லை.

அதில் 81 ஆயிரம் பேர் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள. அது வருத்தப்பட வேண்டிய ஒன்று. இந்த வாரியத்தில் தொழிலாளர்களுக்கு நிறைய பயன்
இருக்கிறது. கட்டிட தொழிலாளர்கள் வாரியத்தில் 12 லட்சத்திற்கு மேல் இருந்த உறுப்பினர்கள், தற்போது 4 லட்சத்திற்கு வந்துள்ளார்கள். வீட்டு வேலை பணியாளர்கள் தங்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  திராவிட கட்சிகள் கொள்கையை பின்பற்றிக்கொண்டு வந்த காரணத்தினால்தான் பெண்கள் படிக்கிறார்கள். பெண்கள் என்றால் அடுப்பு ஊதுபவர்கள் என்று இருந்ததை உடைத்தது பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதிதான். அரசு ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார் முதல்வர்.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்தி பள்ளிக்கு ஒரு வகுப்பறையை அதிக நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு அமைக்கலாம் என்று கூறி இருக்கிறார். மகளிர் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் மகளிருக்கு நல்ல தீர்மானம் (சட்டம்) ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். அந்த சட்டம் நிச்சயமாக ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பெண்களுக்காக நிறைவேற்றப்பட்ட பல சட்ட முன்வடிவு நிலுவையில் உள்ளது. அவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Assembly , The Chief Minister will soon bring a good law for women in the Assembly to achieve security, employment and economic development; Speaker's father's information
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...