தமிழக அரசின் சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு சார்பில் நெல்லை, பாளையங்கோட்டையில் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அறிவுசார் சமூகத்தை  வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன என்றும் இந்திய துணைக்  கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் எனவும் முதல்வர் எழுச்சி உரையாற்றினார். நெல்லை, பாளையங்கோட்டையில் 2 நாட்கள் (26 மற்றும் 27ம் தேதிகளில்) நடைபெறும்  பொருநை இலக்கிய திருவிழாவை நேற்று காலை சென்னையில் இருந்தபடி முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்ச்  சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த  பெருமைக்குரிய சமூகம். கீழடியை தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல  அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும்  அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடைய பெருமை. இந்த  பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார் சமூகத்தை  வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. தமிழின்  செழுமைமிகு இலக்கிய ‌மரபுகளை போற்றும்‌விதமாக பொருநை, வைகை, காவிரி,  சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கிய திருவிழாக்களை தமிழ்நாடு அரசு  நடத்துகிறது.

இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில்  முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி.  ‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’ என்று பாவேந்தர் சொன்னதற்கிணங்க நமது  தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்கு பறைசாற்ற  நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள். இந்திய துணைக்  கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: