பிக்பாக்கெட் திருடனை துரத்தி பிடித்த கர்ப்பிணி காவலருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி

பெரம்பூர்: சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் சுசீலா (30). இவர், நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பணி சம்பந்தமாக பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து 48பி என்ற பேருந்தில் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் வந்து கொண்டிருந்தார். அப்போது, காவல் நிலையம் அருகே பஸ் வந்தபோது, திடீரென்று பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது, 2 பேர் செல்போனை திருடிக்கொண்டு ஓட முயற்சி செய்தனர். சுசீலா அதில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, பெண் காவலரை தள்ளிவிட்டு அந்த நபர் ஓடினார்.

மற்றொருவரை பெண் காவலர் சுசீலா மடக்கி பிடித்தார். பொதுமக்கள் உதவியுடன் சுசீலா அவரை பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் அழைத்து விசாரித்தார். அதில், பிடிபட்ட நபர் புளியந்தோப்பு திருவிக நகர் முதல் தெரு பகுதியை சேர்ந்த ஜாபர் ஷெரிப் (36),என்பது  தெரிந்தது.இவரிடம் திருட்டு செல்போன் ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர், மீது ஏற்கனவே அண்ணா நகர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பேசின்பிரிட்ஜ் குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது, 3 மாத கர்ப்பிணியாக உள்ள சுசீலா திறம்பட செயல்பட்டு, ஓடும் பேருந்தில் செல்போன் திருடனை மடக்கிப்பிடித்த செய்தி நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனால், அவரின் மன தைரியத்தை பாராட்டும் வகையில், வடபழனி சூர்யா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ராஜுசிங் குமார் மற்றும் குமார் உள்ளிட்டோர் நேற்று புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில், சுசீலாவிற்கு ₹1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில், பேசின்பிரிட்ஜ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: