ரூ.20 ஆயிரம் கடனுக்காக தீக்குளித்த பெண் உயிரிழப்பு

பெரம்பூர்:  சென்னை ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் அப்துல்ஹஜீஸ். இவரது, மனைவி ஷமீம் (39). இவர்களுக்கு ரகுமான் என்ற மகனும், தமீம் நிஷா என்ற மகளும் உள்ளனர். தமீம் நிஷா திருமணமாகி பெரம்பூரில் வசித்து வருகிறார். குடும்ப தேவைக்காக அப்துல்ஹஜிஷின் மனைவி ஷமீம் ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியை சேர்ந்த ஆரூண் (31) என்பவரிடம் ₹40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில், ₹20 ஆயிரம் கடனை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதி ₹20 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

இதனால், ஆரூண் அடிக்கடி போன் செய்து, பணம் கேட்டு, ஷமீமை தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், உடனடியாக பணத்தை தரவில்லை என்றால் வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்தி விடுவேன் என  மிரட்டியுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ஷமீம் கடந்த 22ம்தேதி மாலை 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் குடியிருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷமீம் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவம் தொடர்பாக 16வது பெருநகர குற்றவியல் நடுவர், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஷமீமிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஷமீம்க்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியை சேர்ந்த ஆரூண் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷமீம் நேற்று காலை 5 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: