தொழிலதிபர், கார் டிரைவர் எரித்து கொலை; சாமியார், கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருச்சி: கள்ளக்காதல் தகராறில் தொழிலதிபர், கார் டிரைவரை எரித்துக்கொன்ற சாமியார், இவரது கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவர், தனது கார் டிரைவர் சக்திவேலுடன் கடந்த 2007 ஜனவரி 22ம் தேதி திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன்(55), அவரது கள்ளக்காதலி யமுனா(52), யமுனாவின் தாய் சீதாலட்சுமி ஆகிய 3 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

யமுனாவின் கணவர் தங்கவேல். வைர வியாபாரி. இவர், துரைராஜிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை திருப்பிக்கேட்டு வந்தார். மேலும், யமுனாவிடம் கள்ளக்காதலும் வைத்திருந்தார். இதனால் இவரை கொலை செய்ய, சாமியார் கண்ணனுடன் சேர்ந்து யமுனா திட்டமிட்டார். அதன்படி அவர்கள் துரைராஜையும், அவரது கார் டிரைவரையும் கொலை செய்துள்ளனர். இதற்கு யமுனாவின் தாய் சீதாலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் 3.12.2013ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 9 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கு திருச்சி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். ஆனால் மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் 80 பேர் சாட்சியம் அளித்தனர். இரு தரப்பு விவாதம் கடந்த 12ம் தேதி முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சாமியார் கண்ணன் மற்றும் அவரது கள்ளக்காதலி யமுனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு அளித்தார்.

Related Stories: