காணொலியில் நடத்த ஏற்பாடு; டிச.17ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்

புதுடெல்லி: 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் 17ம் தேதி காணொலி வாயிலாக நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது, கேசினோ, ரேஸ் கோர்ஸ், ஆன்லைன் விளையாட்டுக்கு 28% வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கவுன்சில் கூடி, வரி விதிப்பு மாற்றங்கள், புதிய வரி விதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தும். இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் என பலர் கலந்து கொள்வார்கள். 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 28, 29ம் தேதிகளில் சண்டிகரில் நடந்தது.

இதில் அரிசி, பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சி, கத்தி பிளேடு, ஷார்ப்பனர், பென்சில், மருத்துவமனை அறை, எல்இடி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், காசோலை என சுடுகாடு வரை ஏழை, எளிய அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில், 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 17ம் தேதி காணொலி மூலம் நடைபெறும் என ஜிஎஸ்டி கவுன்சில் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது மற்றும் கேசினோ, ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28% வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆன்லைன்  விளையாட்டு மோகத்தால் ஏராளமான தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் வகையில் ஆன்லைன் விளையாட்டுக்கு தற்போது  விதிக்கப்படும் 18% பதிலாக 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதாக  கூறப்படுகிறது. அதன்படி, கேசினோ, ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் விளையாட்டு  ஆகியவற்றுக்கு 28% வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைச்சர்கள் குழு  அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தங்களது அறிக்கையை கடந்த வாரம்  சமர்ப்பித்தது. இதேபோல், ‘ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை  கொண்டு வர மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசுகள்  சம்மதித்தால் நாங்களும் தயாராக உள்ளோம்’ என்று ஒன்றிய பெட்ரோலியத்துறை  அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடந்த 14ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: