உலக கோப்பையில் ஒரே இந்தியர்: மகிழ்ச்சியை விதைக்கும் வினய்

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், லீக் சுற்றிலேயே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பறக்கிறது. களத்தில் உள்ள 32 நாடுகளில்  பலவும் இந்தியாவை விட மக்கள்தொகையில், பரப்பளவில், வளத்தில் சிறியவை.

100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சீனா, இந்தியாவால் பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. சீனாவாவது ஒரே ஒருமுறை (2002) உலக கோப்பையில் ஆடியுள்ள நிலையில்,  92 ஆண்டுகளாக இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு எட்டாக் கனியாகவே உள்ளது. நம் ரசிகர்கள் மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோவுக்காக அவர்கள் சார்ந்த அணிகளை கொண்டாடி வருகின்றனர். களத்தில் இந்தியா இல்லாவிட்டாலும், உலக கோப்பையில் ஒரு இந்தியர் இடம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி மனதுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. உலகின் 2வது ரேங்க் அணியான பெல்ஜியத்தின் வெற்றிக்கு காரணமானவராகத் திகழ்பவர்தான் அவர்.

பெயர் வினய் மேனன் (48).  கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள சேரை கிராமத்தில் பிறந்தவர்.  உடற்கல்வியில் கல்லூரி படிப்புகளை முடித்த வினய் பின்னர் புதுச்சேரி பல்கலை.யில் எம்பில் பட்டம், தொடர்ந்து புனேவில் யோகா படித்து புதுச்சேரி பல்கலை.யில் ஆசிரியராகவும் வேலை செய்திருக்கிறார். அதிலும் மனநிறைவு இல்லாததால் இந்தியா, துபாயில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் மனநல பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். பலரின் மகிழ்ச்சிக்கு காரணமானவருக்கு, இமயமலை விடுதி ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கு முதல்நாள்,   நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் புளோனியும் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போதே மகிழ்ச்சியை மட்டுமின்றி  மனதையும் பரிமாறிக்கொள்ள...வாழ்க்கைத் துணையாக மாறி தமிழ்நாட்டின் மருமகனாகிவிட்டார்.

துபாயில் பணியாற்றியபோது அவரின் சிறப்பை உணர்ந்த இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான ‘செல்சீ’ உரிமையாளர் ரஷ்ய தொழிலதிபர் ரோமன் அர்காடிவிச்,  தனக்கு தனிப்பட்ட மனநல பயிற்சியாளராக பணியாற்ற அழைத்துச் சென்றார். பிறகு 2009 முதல் செல்சீ அணியின் மனநல பயிற்சியாளராகப் பணியாற்றவும் வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி வினய் விதைத்த மகிழ்ச்சி விதைகள் அந்த அணியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தது. செல்சீயில் அவர் கொண்டு வந்த மாற்றங்களை உணர்ந்த   ராயல் பெல்ஜியம் கால்பந்து சங்கம் (ஆர்பிஎப்ஏ), தங்கள் தேசிய அணியின் மனநல பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த யுஈஎப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் பெல்ஜியம் அணியின் மனநல பயிற்சியாளராக பணியை தொடங்கினார். நடப்பு உலக கோப்பையிலும் அது தொடர்கிறது. வினய்க்கு    அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும்  தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெருமையை உலகறிய வைத்துள்ள வினயிடம் பேசியபோது, ‘வீரர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும்.

அதனை உற்சாகமாக எதிர்கொள்ளும்போது வெற்றி எப்படி எளிதாகும், ஆட்டத்திறன் எப்படி அதிகரிக்கும் என்பதை உணர வைப்பதே என் வேலை. பெல்ஜியம் தேசிய அணியில் அதைத்தான் செய்கிறேன். செல்சீ அணியுடனான எனது பயணம் தொடரும். எதிர்காலத்தில் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து அதிக வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. பல வெளிநாட்டினர் என்னிடம், பல கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து கால்பந்து விளையாட 11 பேர் இல்லையா என்று கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில், அடிமட்டத்தில் இருந்து பணிகளை தொடங்க இருக்கிறேன். எனது இந்த உயரத்திற்கு காரணம் எனது பெற்றோர்தான். அவர்கள் எதற்காகவும் என்னை கட்டாயப் படுத்தியதில்லை. அதுதான் மகிழ்ச்சியாக என பணிகளை செய்ய வைத்தது. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சிதானே முக்கியம். அதுதான் நம்மை சரியான முடிவுகளை எடுக்க வழிகாட்டும்’ என்றார்.

Related Stories: